கண்ணன் கோகுலத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தபோது அவைகளை ஓரிடத்தில் மேயவிட்டு யமுனையில் நண்பர்களுடன் விளையாகடச் சென்றார். அப்போது பிரம்மன் தோன்றி அவைகளை தேரழுந்தூருக்கு ஓட்டிக் கொண்டு வந்து விட்டார். கண்ணன் இந்தப் பசுக்களை தேடாமல் புதிய பசுக்கூட்டத்தை படைத்து விட்டான். பிரம்மன் தனது தவறை உணர்ந்து, கண்ணன் முன்தோன்றி தேரழுந்தூரில் ஆநிரை மேய்ப்பவராக எழுந்தருள வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார். அதனால் இத்தலத்து உத்ஸவர் 'ஆமருவியப்பன்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் தேவாதிராஜன் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் ஆமருவியப்பன், ஆநிரைகளை மேய்த்த நிலையால் அவரது பின்புறம் பசுவும், முன்புறம் கன்றும் உள்ளன. தாயாருக்கு செங்கமலவல்லி என்னும் திருநாமம். கருடன், தர்மதேவதை, காவேரி, உபரிசரவஸு, அகஸ்தியர் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
இவ்வூர் கம்பர் அவதரித்த ஸ்தலம். அதனால் கோயில் கோபுரத்தின் உட்புறம் கம்பரும், அவரது மனைவியும் தனி சன்னதியில் நிற்கின்றனர். கோயிலுக்கு தென்மேற்கே சற்றுத் தொலைவில் உள்ள 'கம்பன் மேடு' என்னும் இடத்தில்தான் கம்பர் வாழ்ந்ததாகக் கூறுகின்றனர். மணவாள மாமுனிகள் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
திருமங்கையாழ்வார் 45 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|